எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

திமுக ஆட்சியை அகற்ற நினைக்கும் கட்சிகள்..: தவெகவிற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பா?

இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார்.

ராம் அப்பண்ணசாமி

தவெக உடனான கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, `திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்ற கருத்துடைய கட்சிகள் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று (ஜூலை 5) எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

`234 தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று மக்களை சந்திக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, வரும் 7-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. நான் ஏற்கனவே தெரிவித்தபடி 2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத 525 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது.

அதில் எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை மக்களிடம் எடுத்துச்சொல்வோம். பொய்யை மூலதனமாக வைத்து ஆட்சியைப் பிடித்தவர்களைப் பற்றி மக்களிடம் எடுத்துக்கூறி நாங்கள் வாக்கு சேகரிப்போம்’ என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

விஜய் நேற்று ஒரு முடிவை அறிவித்திருக்கிறார். கூட்டணி குறித்து, முதல்வர் வேட்பாளர் குறித்து..

அது அவருடைய முடிவு.

பாஜக அதிமுக கூட்டணியை அவர் விமர்சித்திருக்கிறார். ஆதாயத்திற்கான கூட்டணி என்று கூறியுள்ளார்..

ஒவ்வொரு கட்சியும் ஒரு விமர்சனத்தை முன்வைக்கும். அதன் அடிப்படையில் அவரும் ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார், அவ்வளவுதான். எல்லா கட்சிகளுமே விமர்சனம் செய்யும் கட்சிகள்தான்.

திமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று (விஜய்) சொல்லியிருக்கிறார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று நேரடியாக எதுவும் சொல்லவில்லை..

இந்த கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்.

தவெகவிற்கு அழைப்பு விடுப்பீர்களா?

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவேண்டும். அதில் ஒத்த கருத்துடைய கட்சியெல்லாம் இணைந்து தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

திமுக அகற்றப்படவேண்டும் என்று யாரெல்லாம் எண்ணுகிறார்களோ, அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களும் ஒத்துழைக்கவேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.

தேசிய ஜனநாயக கூட்டணியில் நீங்கள் அங்கம் வகிக்கிறீர்கள். ஆனால் அதிமுகதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற நிலைப்பாட்டில்..

கூட்டணி குறித்து தெளிவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது, இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும், அதிமுக ஆட்சி அமைக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்தார். அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டன.