அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை அதிமுக எடுத்து வருகிறது. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இரு நாள்களாக ஆலோசனை நடத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதன் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
அதிமுகவின் மிக மூத்த தலைவரான செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இது என்பதால், இந்தக் கூட்டத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
தமிழ்நாடு முழுக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதால், மாவட்டச் செயலாளர்களுக்கு இது சார்ந்த அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தீவிர கண்காணிப்பில் கவனமாக அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவெளியில் கூட்டணி பற்றி யாரும் பேச வேண்டாம் என்றும் அது தாமாகவே நடக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், பூத் கிளை கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளையும் துரிதப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ADMK District Secretaries Meeting: Edappadi Palaniswami Spoke about alliance
Edappadi Palaniswami | AIADMK | ADMK | District Secretaries |