பாலியல் வன்கொடுமைகளுக்காக அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவும், பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவும் கள்ளக்கூட்டணி அமைத்து அமைதி காப்பதாக கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன்.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (ஜன.14) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
`அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மக்களைக் குழப்பி அதிமுகவும் பாஜகவும் கபட நாடகம் நடத்தி வந்த நிலையில், அவர்களின் லட்சணம், சென்னை அண்ணா நகரிலும் மதுரையிலும் அவலட்சணமாக அம்பலப்பட்டு இருக்கிறது.
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்கவே `யார் அந்த சார்?’ என்று அதிமுக நாடகம் நடத்தியது. பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ். ஷா நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, தன் கட்சிக்காரர் எம்.எஸ். ஷாவின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்குத் தேதி குறித்துவிட்டாரா?
`தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என வானத்துக்கும் பூமிக்கும் குதித்த தமிழிசை சவுந்தரராஜனும், குஷ்புவும் அமைதி நிலைக்குச் சென்றுவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளுக்கு வீராவேச நடிப்பைக் காட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எஸ். ஷா பாலியல் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை?
10 வயது குழந்தையைப் பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டபோது பாஜக அமைதி காத்தது. 15 வயதுப் பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி கைதாகும்போது அதிமுக அமைதி காக்கிறது. இதுதான் கள்ளக் கூட்டணி.
பாலியல் குற்றவாளிகளை, அதிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்துபவர்களை கட்சிப் பொறுப்பாளர்களாக வைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பெண்கள் மீது கொஞ்சம் கூட கவலையில்லை. அப்படி கவலை இருந்தால் யார் தவறு செய்தாலும் குரல் எழுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் கூட்டணியினர் என்பதால் மூடி மறைக்கின்றனர். இப்படி தங்களுடைய அசிங்கமான அரசியலை எல்லாம் மூடி மறைக்கத்தான் கள்ளக் கூட்டணி நடத்தும் அரசியல் நாடகம் அனைத்தையும் மக்கள் அறிவார்கள். இந்த நாடகங்கள் இனி ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது’ என்றார்.