தமிழ்நாடு

ஆள் கடத்தல் வழக்கு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம் கைது!

இந்த விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்திக்கு கடுமையான கண்டத்தை நீதிபதி தெரிவித்தார்.

ராம் அப்பண்ணசாமி

கடத்தல் வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக செயல்பட்டு, கூலிப்படையினரை வைத்து சம்மந்தப்பட்ட களம்பாக்கம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது புகார் எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்பட்டது.

மேலும், சம்மந்தப்பட்ட இளைஞரை கடத்த ஏடிஜிபி ஜெயராமனின் அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்த கடத்தில் வழக்கில் முன் ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகன் மேற்கொண்டார். ஜெகன்மூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், கடத்தல் வழக்கிற்கும் தன் கட்சிக்காரருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவருக்கு முன் ஜாமின் வழங்க கோரிக்கை முன்வைத்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன், வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 பேர் கைது செய்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமுக்குத் தொடர்புள்ளதாகவும் வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணிக்கு மேல், பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார். ஆள் கடத்தில் ஏடிஜிபி ஜெயராமனுக்கு சம்மந்தம் இல்லை என்றும், கடத்தலில் கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும் பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில் ஜெகன்மூர்த்திக்கு கடுமையான கண்டத்தை தெரிவித்த நீதிபதி, ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி காவல்துறையினருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவல்துறை பாதுகாப்பில் வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

அதன்பிறகு, ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 26-க்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார்.