பாஜக மற்றும் தவெகவிலில் இருந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
‘துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'ஹீரோ', ரஜினியின் 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் ரஞ்சனா நாச்சியார். இயக்குநர் பாலாவின் உறவினரான இவர், டிவி சீரியலில் நடிக்கத் தொடங்கி பின்னர் திரைத்துறைக்குள் இணைந்தார். ராணி வேலுநாச்சியாரின் வம்சாவளியான ரஞ்சனா நாச்சியார், சமீபத்தில் குன்றத்தூர் அருகே பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றபோது விரட்டிச் சென்று தட்டிக்கேட்டதன் மூலம் புகழடைந்தார்.
பாஜகவில் இருந்த ரஞ்சனா நாச்சியார்
பாஜகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகினார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தவெகவில் பிரச்னை
ஆனால் சமீபத்தில் மகளிர் தின விழாவில் தவெக தலைவர் விஜய் ’விவாகரத்து விவகாரம்’ குறித்து பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா என பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார். அதன்பின் தொடர்ந்து தவெகவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
திமுகவில் இணைந்தார்
இந்நிலையில், தவெகவில் இருந்து விலகிய அவர், இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
திமுகவில் இணைந்தது ஏன்?
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“தவெகவில் இருந்து விலகி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் என்னை திமுகவில் இணைத்துக் கொண்டேன். பெரியாரின் சிந்தனைகள், கருணாநிதியின் அரசியல் பாரம்பரியம், அண்ணாவின் அரசியல் வழிகாட்டுதல் ஆகியவை இணைந்தது தான் திமுக. என் கொள்கைகளுக்கு ஏற்ப பயணிக்கக் கூடிய இயக்கம் திமுக என்பதால் அதில் நான் இணைந்திருக்கிறேன்.
தவெகவில் பெண்கள் அவமதிப்பு
ராணி வேலுநாச்சியரை கொள்கைத் தலைவராக அறிவித்த காரணத்தால் நான் தவெகவில் இணைந்தேன். ஆனால் அங்கு தொடர்ந்து பெண்களைப் புறக்கணிப்பதும், அவமதிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல் விஜய் மக்களைச் சந்திப்பதற்காக வெளியில் வரவே இல்லை. தேர்தலுக்கு 30 நாள்கள்தான் இருக்கும் நிலையிலும் அவர் வெளியில் வராமல் இருக்கிறார். பிரச்னை வந்தால் அவரது தொண்டர்களும் ஓடி ஒளிய வேண்டியதாக இருக்கிறது. தேர்தல் என்றால் இந்நேரத்திற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் நிர்வாகிகள் சென்று களத்திலிருந்து வேலை பார்க்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் தவெகவில் நடக்கவில்லை. மேடைப் பேச்சுக்கு நான்கு பேர் இருந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் கட்சி நடத்திவிட முடியாது. என்னைப் பொறுத்தளவில் அரசியல் என்பது ஒரு பொறுப்பு. அந்த வகையில் விஜய் அரசியல் தலைவராக உயர்வார் என்ற நம்பிக்கை போய்விட்டது” என்றார்.
Actress Ranjana Natchiyar, who was in the BJP and TVK, has joined the DMK today in the presence of Chief Minister Stalin.