திமுகவில் இணைந்ததில் இருந்து தவெகவினரால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் புகார் தெரிவித்துள்ளார்.
பாஜகவிலும் தவெகவிலும் இருந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், கடந்த மார்ச் 19 அன்று திமுகவில் இணைந்தார். இதையடுத்து தவெகவிலிருந்து வெளியேறியதில் இருந்து தன் மீது அவதூறு பரப்பி, அச்சுறுத்தலில் ஈடுபடுவதாக தவெகவைச் சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்துள்ளார்.
ஆபாச சித்தரிப்பு, மிரட்டல்கள்
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“நான் கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்துள்ளேன். தவெகவிலிருந்து வெளியேறிய நாள் முதல் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் என்மீது அவதூறு பரப்பி, என்னை அச்சுறுத்தி வருகின்றனர். ஆபாச வார்த்தைகளால் பேசுவது, படங்களை ஆபாசமாகச் சித்தரிப்பது, தொலைப்பேசியில் மிரட்டல் விடுப்பது போன்ற தொடர் அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
விஜய் படத்துடன் ஆபாச விமர்சனம்
இதையெல்லாம் செய்பவர்கள் வெர்ச்சுவல் வாரியர்ஸ் என்பவர்கள்தான். வாய்ஸ் ஆஃப் காமன் என்று ஆதவ் அர்ஜுனா ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். அதைச் சார்ந்த, விஜய் அறிமுகம் செய்தவர்கள்தான் இப்படிச் செய்கின்றனர். என் மீது அவதூறு பரப்புவோர் அனைவருமே விஜயின் படத்துடனும், அவரது கட்சிப் படத்துடனும் இருப்பவர்கள். இவர்களைக் கண்டித்தோ, இவர்களுக்கும் கட்சிக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டோ யாரும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
விஜய் பொறுப்பேற்க வேண்டும்
தவெகவிலிருந்து வெளியே வந்த பெண்களைக் குறி வைத்து தொடர்ச்சியாக அவதூறுகளும் அச்சுறுத்தல்களும் நடைபெறுகின்றன. கட்சிக்குள் இருந்தவரை சகோதரியாகத் தெரிந்தவர்கள் மீது, வெளியேறியதும் இத்தகைய மோசமான விமர்சனங்களைப் பதிவிடுகின்றனர் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தவெக தலைவர் விஜய்க்கு இருக்கிறது. இதற்கு அவர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அவரது தலைமைப் பண்பு கேள்விக்குறியாக்கப்படும். காணொளியோ, குரல் வழிப் பதிவோ, அறிக்கையோ வெளியிட்டு, இவர்களுக்கும் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றாவது விஜய் தெரிவிக்க வேண்டும்.
தவெக அபாயகரமானது
மரத்தின் மீது ஏறாதீர்கள். இறங்கினால்தான் முத்தம் கொடுப்பேன் என்று விஜய் ஒரு பிரசாரத்தில் சொன்னது போல், இப்படி சமூக ஊடகத்தில் அச்சுறுத்தல்களைச் செய்யாமல் இருந்தால் முத்தம் கொடுப்பேன் என்றாவது ஓர் அறிக்கையை அவர் வெளியிடலாம். இன்றைய ஜென் ஸி தலைமுறையில் விஜய் தொடர்ச்சியாக இதுபோன்ற கலாசாரத்தை ஊக்குவித்து வருகிறார். இது தமிழ்நாட்டிற்கும், பெண்களுக்கும் கேடானது. நாட்டில் ஏற்படப்போகிற எரிசக்தி அவசர நிலையை விட தவெக அபாயகரமானது.
பொன்ராஜ் திமுக நிர்வாகியா?
நேற்று பொன்ராஜின் கருத்திற்கு எதிராக விஜய் புகார் அளித்துள்ளார். பொன்ராஜ் திமுக நிர்வாகியா? ஆனால் எது நடந்தாலும் திமுகதான் காரணம் என்று சொல்கிறார் விஜய். அவர் வீட்டில் எது நடந்தாலும், அவரது மனைவி விவகாரத்து கோரினாலும், அவரது கட்சியிலிருந்து யாராவது வெளியேறினாலும் உடனே திமுகதான் காரணம் என்று குற்றம் சொல்லி வருகிறார். இது தொடரக் கூடாது என்பதற்காக சட்டப்பூர்வ புகாரை அளித்திருக்கிறோம். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும், நீதித்துறையை நம்பித்தான் புகார் அளித்திருக்கிறோம்” என்றார்.
Actress Ranjana Natchiyar has complained that she has been threatened by TVK IT warriors s since joining the DMK.