தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகை கஸ்தூரிக்கு வரும் நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம்.
கடந்த நவ.3 அன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து மரியாதைக் குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து தலைமறைவான கஸ்தூரி, நேற்று (நவ.16) ஹைதராபாதில் கைது செய்யப்பட்டார்.
இன்று (நவ.17) காலை சென்னை அழைத்து வரப்பட்ட கஸ்தூரி, அதன்பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே உதவி ஆணையர் ஜெகதீசன் தலைமையிலான காவலர்கள் கஸ்தூரியிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே அழைத்து வரப்பட்ட கஸ்தூரி, `அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்’ என்றார்.
இதன்பிறகு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் கஸ்தூரி. 5-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, தனக்கு சிறப்பு குழந்தை இருப்பதால் அவரை பார்த்துக்கொள்ள சொந்த ஜாமினில் தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் கஸ்தூரி.
ஆனால் கஸ்தூரியின் ஜாமின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ரகுபதி, அடுத்த 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதன்படி வரும் நவம்பர் 29 வரை சிறையில் அடைக்கப்படுவார் கஸ்தூரி.
இந்நிலையில், கஸ்தூரியின் கருத்துக்குப் பிறகு வெளியே செல்ல அச்சமும், மன அழுத்தமும் ஏற்பட்டது எனவும், அவரது வார்த்தைகள் வன்மத்தைக் கக்கும் விதமாகவும், பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது எனவும் தெலுங்கு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நந்த கோபால் அளித்த புகாரின் பெயரில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.