டிஜிபி சங்கர் ஜிவால் https://tnrajbhavan.gov.in/
தமிழ்நாடு

சங்கர் ஜிவால் பணி ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் நியமனம்? | DGP | Shankar Jiwal

புதிய டிஜிபிக்கான தேர்வுப் பட்டியலில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், தற்போது தமிழக காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள ஜி. வெங்கட்ராமன், சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் ஆக 31-ல் பணி ஓய்வு பெறவுள்ளார். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்னதாக இன்று (ஆக. 29) மாலை 4 மணியளவில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சங்கர் ஜிவாலுக்கான பணி நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதில் தமிழக காவல்துறையின் உயரதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

அதேநேரம், பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை, தமிழக அரசு இன்னும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணத்திற்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியை தேர்ந்தெடுக்க இன்னும் சில காலம் தேவைப்படும் என்பதால், அதுவரை தற்போது தமிழக காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள ஜி. வெங்கட்ராமன், சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நாகப்பட்டினத்தில் பிறந்த ஜி. வெங்கட்ராமன் கடந்த 1994-ல் தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார். தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர் கடந்தாண்டு ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்றார். நிர்வாகப் பிரிவு ஐஜியாக பணியாற்றியபோது காகிதமில்லா நடைமுறையை தமிழக காவல்துறையில் அறிமுகம் செய்தார்.

புதிய டிஜிபிக்கான தேர்வுப் பட்டியலில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்த நிலையில், வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வினித் தேவ் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் உள்ளனர்.