தமிழ்நாடு

மதுரை காவலர் படுகொலை: முக்கிய குற்றவாளி என்கவுன்ட்டர்!

கஞ்சா வழக்கில் சிறை சென்று திரும்பிய பொன்வண்டு என்ற நபருக்கு, முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

ராம் அப்பண்ணசாமி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி பொன்வண்டு தேனி மலைப்பகுதியில் வைத்து காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கள்ளபட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். நேற்று முந்தைய தினம் பணி முடிந்து வீடு திரும்பிய முத்துக்குமார், அருகில் உள்ள முத்தையன்பேட்டை டாஸ்மாக்கில் மது அருந்தச் சென்றுள்ளார்.

அப்போது அங்கே ஏற்கனவே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த, கஞ்சா வழக்கில் சிறை சென்று திரும்பிய பொன்வண்டு என்ற நபருக்கு, முத்துக்குமார் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, பொன்வண்டின் நண்பர்கள் முத்துக்குமாரைக் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் உயிரிழந்துள்ளார். அவருடன் அங்கே சென்றிருந்த அவரது உறவினர் ராஜாராம் என்பவருக்கு இந்த தாக்குதலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக உசிலம்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையிலான காவல்துறையினர் முத்துக்குமார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தப்பியோடிய பொன்வண்டு கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வருஷநாடு மலைப்பகுதியில் பதுங்கியிருக்கும் தகவல் காவல்துறைக்குக் கிடைத்துள்ளது. இதை அடுத்து மதுரை சரக ஐஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காவலர் கொலையில் சம்மந்தப்பட்ட முக்கியக் குற்றவாளியான பொன்வண்டு காவல்துறையினால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.