கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புச் சம்பவம் குறித்த காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கையில், விஜய் வருகை வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை என்று ஆவணங்கள் சில இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அவ்வாறாகப் பகிரப்பட்டு வரும் முதல் தகவல் அறிக்கையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது காவல் துறை சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்புடைய முதல் தகவல் அறிக்கை என்று பரவி வரும் எஃப்ஐஆரில் இடம்பெற்றுள்ள முக்கிய வரிகள்
"காலை 9 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழக வெற்றிக் கழகக் கட்சித் தலைவர் விஜய் அவர்கள் மதியம் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாகச் சொன்னதைத் தொடர்ந்து, காலை 10 மணியிலிருந்தே பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் வரத் தொடங்கினார்கள்."
"கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10,000 தொண்டர்கள் தான் வருவார்கள் என்று எழுதி கொடுத்துள்ளார்கள். ஆனால், பிரசாரக் கூட்டத்துக்கு சுமார் 25,000-க்கும் மேற்பட்டோர் வந்தார்கள்."
"சுமார் மாலை 4.45 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையும், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோவை பல்வேறு இடங்களில் நடத்தி, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்."
"அதிக இடங்கலில் நிபந்தனைகள் மீறியும் வரவேற்புகள் நடத்தியும் காலதாமதம் செய்து மாலை 6 மணிக்கு முனியப்பன் கோயில் சந்திப்பில் ராங்ரூட்டில் அதாவது ரோட்டின் வலதுபுறம் கட்சியின் தலைவர் விஜய் வாகனங்களை அழைத்துச் சென்றுள்ளார்கள்."
"மாலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் சந்திப்பில் தொண்டர்களில் கூட்டத்துக்கு நடுவே வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தார்கள்."
"அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக்கூட்டம் அலைமோதச் செய்து மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சுத் திணரல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகனிடமும் பொதுச்செயலாளர் என். ஆனந்திடமும் மற்றும் இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் பலமுறை எச்சரித்து அறிவுரை வழங்கப்பட்டது."
"சொன்னதைக் கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டார்கள். போதிய பாதுகாப்பைக் காவல் துறையினர் வழங்கியபோதும், தவெக தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களைச் சரிவர ஒழுங்குபடுத்தவில்லை."
"தவெக கட்சியின் கரூர் ஏற்பாட்டாளர்களுக்கு விஜயின் பொதுக்கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை காவல் துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்தபோதிலும், அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தைப் பறைச்சாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் அவர்கள் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியுள்ளார்கள்."
"அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக, அங்கு பல மணிநேரங்களாகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்தார்கள். நீண்ட நேர காத்திருப்புக்குப் போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அதிகக் கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல்நிலையில் சோர்வடைவு ஏற்பட்டது."
Karur | Karur Police | Karur Stampede | Karur FIR | Vijay | TVK Vijay |