அப்துல் ஹமீது @bhabdulhameed5570
தமிழ்நாடு

நான் நலமாக இருக்கிறேன்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அப்துல் ஹமீது

“1983-ல் இனக்கலவரம் ஒன்றில் என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொழுத்தியதாக வதந்திகள் பரவியது”.

யோகேஷ் குமார்

பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீது காலமானதாகச் செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, அது அனைத்தும் வதந்தி என உருக்கமாக பேசி விளக்கம் அளித்துள்ளார்.

தனது தனித்துவமான தமிழ் உச்சரிப்பால் பிரபலமடைந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது, ‘பாட்டுக்கு பாட்டு’ என்ற நிகழ்ச்சி மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். சமீபத்தில் இவர் உடல்நலக்குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அப்துல் ஹமீது.

அவர் பேசியதாவது:

“மீண்டு வந்து பேசுகிறாரே என்று சிலர் வியப்படையலாம். இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷம செய்திகளை கேட்டு ஆயிரக்கணக்கான அன்பு உள்ளங்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து என்னிடம் பேசிய பிறகே நான் நலமுடன் இருப்பதை தெரிந்து கொண்டனர். சிலர் நான் பேசியதை கேட்டு கதறி அழுததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது எனக்கு 3-வது அனுபவம். 1983-ல் இனக்கலவரம் ஒன்றில் என்னையும் என் மனைவியையும் உயிரோடு கொழுத்தியதாக வதந்திகள் பரவியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் யூடியூப் தளம் நடத்தும் ஒருவர் அதிக பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் காலமானதாக ஒரு செய்தியை பதிவு செய்திருந்தார். நாம் இறந்த பிறகு யாரெல்லாம் நம் மீது அன்பு வைத்திருந்தார்கள் என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. எனவே வாழும் போதே அதனை அறிந்துகொள்ள கடவுள் கொடுத்த சந்தர்ப்பமாக இதனை பார்க்கிறேன். இந்த செய்தியை முதன்முதலில் பரப்பியவரை பலரும் சபித்திருக்கலாம். ஆனால் அந்த சாபங்களில் இருந்து அவரை காப்பாற்ற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.