தமிழ்நாடு

பிரதமருக்கு மௌத் ஆர்கனை வாசித்துக் காட்டிய ஆண்டாள் யானை

கிழக்கு நியூஸ்

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஆண்டாள் யானை மௌத் ஆர்கன் இசைக் கருவியை வாசித்துக் காட்ட, பிரதமர் நரேந்திர மோடி அதைக் கண்டு ரசித்தார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை வந்த பிரதமர் மோடி, இன்று (சனிக்கிழமை) காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் சென்றடைந்தார். கொள்ளிடம் ஆற்றுக்கு அருகே அமைக்கப்பட்ட தற்காலிக இறங்குதளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து கார் மூலம் கோயிலைச் சென்றடைந்தார் பிரதமர் மோடி.

ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து பிரதமர் மோடியை வரவேற்றார்கள். கோயிலில் கம்பராமாயணம் பாடப்பட்டது. இதைப் பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.

கோவிலில் உள்ள ஆண்டாள் யானையிடம் பிரதமர் ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து, ஆண்டாள் யானை "மௌத் ஆர்கன்" இசைக் கருவியை வாசித்துக் காட்டியது. இதையும் பிரதமர் மோடி பார்த்து ரசித்து, யானையைத் தடவிக் கொடுத்துச் சென்றார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார். தற்போது ராமேஸ்வரம் கோயில் வழிபட்டு வருகிறார் பிரதமர் மோடி.