தமிழ்நாடு

தவெகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனா!

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளரான சி.டி.ஆர். நிர்மல்குமாரும் விஜயை சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ராம் அப்பண்ணசாமி

விசிக முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா இன்று (ஜன.31) தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் ஆதவ் அர்ஜுனாவின் `வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை ஆதவ் ஆர்ஜுனாவும், விஜய்யும் முன்வைத்தார்கள்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு பொது மேடையில் விமர்சனங்களை முன்வைத்த காரணத்தால் விசிகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் ஆதவ் அர்ஜுனா. இதனைத் தொடர்ந்து விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆதவ் அர்ஜுனா.

இந்நிலையில், பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (ஜன.31) விஜயை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனா.

மேலும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளரான சி.டி.ஆர். நிர்மல்குமாரும் இன்று விஜயை சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். முன்பு பாஜக மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமார், கடந்த 2023-ல் அதிமுகவில் இணைந்தார்.

அத்துடன் நாதகவில் இருந்து விலகிய சில முக்கிய நிர்வாகிகளும் இன்று தவெக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு தவெகவில் வழங்கப்பட்ட பொறுப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதுவரை தவெகவில் 38 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.