மீண்டும் மீண்டும் முரண்பாடான கருத்துகளைக் கூறிவரும் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதோ ஒரு செயல்திட்டம் இருப்பதாகப் பேட்டியளித்துள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
செய்தியாளர்களை சந்தித்து ஆதவ் அர்ஜுனா விவகாரம் குறித்து இன்று (டிச.15) திருமாவளவன் பேசியவை பின்வருமாறு,
`நான் ஏற்கனவே விளக்கம் கூறிவிட்டேன். அழுத்தம் கொடுத்து என்னை யாரும் இணங்கவைக்க முடியாது. இந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. விஜய் நடத்திய மாநாடு முடிந்த ஒரு சில நாட்களிலேயே அதை விகடன் தரப்பிடம் நான் கூறிவிட்டேன்.
அப்போது யாரும் அதில் தலையிடவில்லை. நான் அதில் கலந்துகொள்வது குறித்து யாரும் கேட்க வாய்ப்பில்லாத சூழலில் நான் முடிவெடுத்தேன். அனைத்து நேரங்களிலும் முதல்வரை சந்திக்க முடியாது. எனவே சில விஷயங்களை சந்திக்க வாய்ப்புள்ள மூத்த அமைச்சர்களிடம் பகிர்ந்துகொள்வோம்.
அவர் (ஆதவ் அர்ஜுனா) இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது தவறு. அப்படிச் சொல்லக்கூடாது. மீண்டும் இந்தக் கட்சியில் இணைந்து இயங்கவேண்டும் அவர் நினைத்திருந்தால் 6 மாதத்திற்கு அவர் அமைதியாக இருந்திருப்பார். ஆனால் மீண்டும் மீண்டும் அவர் முரண்பாடான கருத்துகளைக் கூறுவது, அவருக்கு ஏதோ ஒரு செயல்திட்டம் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
இடைநீக்கம் என்பது கண்துடைப்பல்ல, அது ஒரு கட்சியின் செயல்முறை. எடுத்த உடனேயே ஒருவரை நீக்கிவிட முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முறை இருக்கிறது. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு அணுகுமுறை இருக்கிறது. எங்கள் கட்சியில் உள்ள தலித் அல்லாதவர்கள் மீது நாங்கள் நிதானமாகவே நடவடிக்கை எடுப்போம்' என்றார்.