தமிழ்நாட்டில் 93.90 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதுதொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எட்டப்படாததால் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அறிவித்தார்கள்.
தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும் என பேரவையின் பொதுச்செயலாளர் மு. சண்முகம் எம்.பி. நேற்று அறிக்கை வெளியிட்டார்.
வேலைநிறுத்தப் போராட் அறிவிப்பைத் தொடர்ந்து, பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதற்கான பணிகளில் போக்குவரத்துத் துறையினர், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் ஈடுபட்டார்கள்.
நள்ளிரவு 12 மணி முதல் பேருந்துகள் ஓடாது என சிஐடியூ பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் நேற்று அறிவித்திருந்தார். எனினும், ஐஎன்டியூசி, தொமுச தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை. வேலைநிறுத்தப் போராட்டத்தால் பேருந்து சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சென்னையில் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலை 8 மணி நிலவரப்படி 15,138 பேருந்துகளில் 14,214 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 93.90 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காரணங்களுக்காகப் போராட்டம் நடத்துவது திசைதிருப்பும் செயல் என்றார். மேலும், போக்குவரத்து சுமூகமாக இயங்கிக்கொண்டிருப்பதாகவும், இதற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.