கோப்புப்படம் 
தமிழ்நாடு

வயநாடு நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழப்பு

மேலும், 30 தமிழர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு நியூஸ்

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை பெரிதளவில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. நேற்று நீலகிரியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. இவர்களைத் தவிர்த்து இருவர் உயிரிழந்த செய்தி இன்று காலை வெளியாகின.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் முண்டக்கை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த துயரச் செய்தியும் இன்று காலை வெளியானது. இவர்கள் தேனியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பிழைப்புக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு கேரளம் சென்றதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிய வருகிறது. 11 பேர் வசித்து வந்த நிலையில், இருவர் மட்டும் பிழைத்துள்ளார்கள்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. மேலும், 30 தமிழர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.