தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷச் சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலப்பு: அரசு தகவல்

கிழக்கு நியூஸ்

கள்ளக்குறிச்சியில் பயன்படுத்தப்பட்ட விஷச் சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததாக சென்னை உயர் நீதிமன்ற்த்தில் தமிழ்நாடு அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தியதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக மற்றும் பாமக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 26-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி.எஸ். ராமன், தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரி வாதிட்டார். வழக்கு விசாரணையை 10 நாள்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனுவைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் பயன்படுத்தப்பட்ட விஷச் சாராயத்தில் 8.6% முதல் 29.7% வரை மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே செங்கல்பட்டு, மரக்காணம் சம்பவத்தில் விஷச் சாராயத்தில் 99% கலக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் 3 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை என தலைமைச் செயலாளர் தனது பதில்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கானது தற்போது வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.