கோடை காலத்தை முன்னிட்டு கூடுதலாக 71 குளிர்சாதன பேருந்துகள் @arasubus
தமிழ்நாடு

கோடை காலத்தை முன்னிட்டு கூடுதலாக 71 குளிர்சாதன பேருந்துகள்: டிஎன்எஸ்டிசி

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் தொடங்கவுள்ளது.

யோகேஷ் குமார்

கோடை கால விடுமுறையை முன்னிட்டு தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக கூடுதல் குளிர்சாதன பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் குடும்பத்துடன் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக் காலத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் நிலையில் பெரும்பாலான மக்கள் குளிர்சாதன பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவார்கள்.

இந்நிலையில் கூடுதலாக 71 குளிர்சாதன பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூறியதாவது:

“தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக கோடை கால விடுமுறையை முன்னிட்டு 387 குளிர்சாதன பேருந்துகள் ஏற்கெனவே ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், பயணிகளின் தேவையையும் வசதியையும் கருத்தில் கொண்டு தற்போது கூடுதலாக 71 குளிர்சாதன பேருந்துகள் இணைக்கப்பட்டு, மொத்தமாக 458 குளிர்சாதனப் பேருந்துகள் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.