மாதிரி படம் 
தமிழ்நாடு

குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழப்பு: ஆலைகளில் ஆய்வு செய்ய அரசு உத்தரவு

ரூ. 10-க்கு மலிவு விலையில் விற்கப்படும் குளிர்பானத்தை அருந்தியதால், தங்களுடைய மகள் உயிரிழந்துள்ளதாகப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

திருவண்ணாமலையில் குளிர்பானத்தை அருந்திய காவ்யா ஸ்ரீ என்ற 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, குளிர்பான ஆலைகளில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேவுள்ள கிராமத்தில் ராஜ்குமார் - ஜோதிலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 6 வயதில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் காவ்யா ஸ்ரீ என்ற சிறுமி உள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று வீட்டின் அருகேவுள்ள கடையில் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படும் குளிர்பானத்தை வாங்கி இந்தச் சிறுமி அருந்தியுள்ளார். சிறிது நேரத்திலேயே இந்தச் சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதன்பிறகு, மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது.

இங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இங்கு சிகிச்சைப் பலனின்றி இந்தச் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முழுக்க தனியார் குளிர்பான ஆலைகள் மற்றும் குளிர்பானங்கள் விற்கப்படும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலுள்ள சம்பந்தப்பட்ட குளிர்பான ஆலையின் கிளையில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

குளிர்பானத்தின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.