கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கூட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்த நிலையில், கட்சிப் பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் மக்களைச் சந்தித்து வருகிறார். திருச்சியில் இரு வாரங்களுக்கு முன்பு இந்தப் பயணம் தொடங்கியது. திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூரில் பயணங்களை முடித்த விஜய், செப்டம்பர் 27-ல் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
கரூர் பிரசாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். பிரசாரத்தை முடித்துக்கொண்டு விஜய் சென்னை திரும்பினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதியழகன் தான் காவல் துறை அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
இதனிடையே, கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் விஜய் கைது செய்யப்படுவாரா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் கைது செய்யப்படுவார்கள், யார் கைது செய்யப்பட மாட்டார்கள் என நீங்கள் எண்ணத்தோடு கேட்கிறீர்களோ, அதற்கு உட்படுவதற்கு நான் தயாராக இல்லை" என்று பதிலளித்தார்.
சென்னை நீலாங்கரையிலுள்ள விஜயின் இல்லத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
TVK | TVK Vijay | Karur | Karur Stampede | N Anand | FIR | Police Case |