வங்கதேசத்திலிருந்து திரிபுரா வந்தடைந்த இந்திய மாணவர்கள் 
தமிழ்நாடு

வங்கதேசத்திலிருந்து 35 தமிழர்கள் தாயகம் திரும்புகிறார்கள்: தமிழ்நாடு அரசு

கிழக்கு நியூஸ்

வங்கதேசத்திலிருந்து முதற்கட்டமாக 35 தமிழர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்டத்துக்காகப் போராடியவர்களின் வழித்தோன்றலுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் முறை 2018 வரை நடைமுறையில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை வங்கதேச அரசு 2018-ல் ரத்து செய்தது. இந்த இடஒதுக்கீடு முறைக்கு விதிக்கப்பட்ட தடையை அந்த நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில் நீக்கியது.

இந்த இடஒதுக்கீடு முறைக்கு எதிராக அந்த நாடு முழுக்க மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வங்கதேசம் 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரப் போராட்டத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியே முன்னிலை வகித்தது. எனவே, இந்த இடஒதுக்கீடு முறையால் அவாமி லீக் கட்சியினரே பெரும்பாலும் பயன்பெறுவார்கள் என்பதால், தகுதியின் அடிப்படையிலான முறை பின்பற்றப்பட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக வன்முறை வெடித்துள்ளதால், வங்கதேசம் முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. கண்டதும் சுடுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறையைத் தொடர்ந்து, இந்திய மாணவர்களைப் பத்திரமாக திரும்ப அழைத்து வருவதற்கானப் பணிகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டது. இதுவரை 978 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் அங்கு சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், முதற்கட்ட இரு விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் இன்று தாயகம் திரும்பவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

"வங்கதேசத்திலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 2 விமானங்கள் மூலம் 35 தமிழர்கள் இன்று தாயம் திரும்பவுள்ளார்கள். விமான நிலையத்திலிருந்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இரண்டாம் கட்டமாக 60 பேரை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்போடு, தமிழர்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது" என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.