கோப்புப்படம் 
தமிழ்நாடு

தவெக மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னென்ன?

நிபந்தனைகளுக்குள்பட்டு மாநாட்டை நடத்த வேண்டும், இல்லையெனில் மாநாட்டை நடத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த காவல் துறை தரப்பில் 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து, கட்சித் தலைவர் விஜய் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மிகவும் வெளிப்படையாக எதையும் குறிப்பிடவில்லை. கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டபோதும், மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறினார். இதன் தொடர்ச்சியாக தவெகவின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 அன்று நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி கோரி தவெக சார்பில் பொதுச்செயலாளர் ஆனந்த் காவல் துறையிடம் கடந்த 28 அன்று மனு அளித்தார். இதைத் தொடர்ந்து 21 கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்புடைய பதில் அறிக்கையை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கடந்த 6 அன்று சமர்ப்பித்தார். பதில் அறிக்கையைத் தொடர்ந்து, காவல் துறை 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு நேற்று அனுமதி வழங்கியது.

  • மாநாடு நடைபெறும் மேடை, இடம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றின் வரைபடங்களைக் கொடுக்க வேண்டும்.

  • முதலில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் 1.5 லட்சம் பேர் வருவார்கள் எனக் குறிப்பிட்டு, பதில் மனுவில் 50 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை அளவுக்கே பாதுகாப்பு வழங்கப்படும்.

  • 50 ஆயிரத்துக்கும் மேல் கூட்டம் கூடினால் கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்களைக் கொண்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

  • பிற்பகல் 2 மணிக்கு மாநாடு தொடங்கும் என குறிப்பிட்டுள்ளதால், அனைவரும் பகல் 1.30 மணிக்குள் வருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

  • வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் யாருடைய தலைமையில் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்கிற விவரங்களை அளிக்க வேண்டும்.

  • மாநாட்டுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

  • அனைவருக்கும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

  • கர்ப்பிணிகள், முதியோர்களுக்கென பிரத்யேக இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

  • விஜய் வந்து செல்லும் வழியில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

  • மாநாடு நடைபெறும் இடத்துக்கு அருகே 6 கிணறுகள் இருப்பதால், யாரும் இந்த இடத்துக்குச் செல்லாமல் இருக்க உரிய தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

  • பதாகைகள், அலங்கார வளைவுகள், கொடி அலங்காரம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  • கூம்பு ஒலிப்பெருக்கி, வாணவேடிக்கையைப் பயன்படுத்தக் கூடாது.

  • மழைக்கு வாய்ப்பு உள்ளதால், முன்னேற்பாடு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

  • விஜயுடன் வருபவர்கள் யார், முக்கியப் பிரமுகர்கள் யார், யாருக்கெல்லாம் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களைப் பகிர வேண்டும்.

  • மாநாட்டில் பங்கேற்பவர்கள் மாநாட்டை எளிதில் காண எல்இடி திரைகளை ஆங்காங்கே பொருத்த வேண்டும்.

  • சிசிடிவி கேமிராக்களை பொருத்தி அனைத்தையும் கண்காணிக்க வேண்டும்.

  • தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அனுமதி பெற்று அதை மாநாடு நடைபெறும் இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.

  • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாநாட்டை நடத்த வேண்டும்.

  • மேடையின் உறுதித்தன்மைக்கான சான்றிதழைப் பொறியாளர்களிடமிருந்து பெற வேண்டும்.