வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோருக்குத் தொடர்பு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த 26 டிசம்பர் 2022-ல் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து சிபிசிஐடி கவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்த சிபிசிஐடி காவலர்கள், 5 சிறுவர்கள் உட்பட 31 பேரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில், ஒரு காவலர் உட்பட 5 பேரை குரல் மாதிரி சோதனைக்கும் உட்படுத்தினார்கள். இந்த விவகாரத்தை முன்வைத்து நடந்த தொடர் போராட்டங்கள் காரணமாக வெளியூர் ஆட்கள் வேங்கைவயலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வேங்கைவயல் வழக்கு தொடர்பான ஒரு விசாரணையை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜன.24) தாக்கல் செய்தார் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர். அதில், அப்பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரான முத்தையாவைப் பழிவாங்கும் நோக்கில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக முதலில் முரளிராஜா புரளி பரப்பியதாகவும், இதனைத் தொடர்ந்து புரளியை உண்மையாக்கும் நோக்கில் சுதர்சனும், முத்துகிருஷ்ணனும் இணைந்து குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவைக் கலந்ததாக விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. வேங்கைவயல் விவகாரம் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள இந்தப் புதிய தகவல் பரபரப்பைக் கூட்டியுள்ளது.