சென்னையை அடுத்த பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்தால் பாதிப்புக்குள்ளாகி பொதுமக்கள் மூவர் இன்று (டிச.5) உயிரிழந்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் நகர் மற்றும் பல்லாவரம் கண்டோன்மன்ட் நிர்வாகத்திற்கு உட்பட்ட மலைமேடு ஆகிய இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கழிவு நீர் கலந்த குடிநீரை அருந்தி அப்பகுதிகளைச் சேர்ந்த 28-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாந்தி, மயக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர்களில் திருவேதி கிருஷ்ணன், வரலட்சுமி, மோகனரங்கன் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை அடுத்து சம்மந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியவை பின்வருமாறு, `நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்பதும், உணவு மூலமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்’ என்றார்.