பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்திவருகிறது தமிழக காவல்துறை.
கடந்த ஜூலை 5-ல் சென்னை பெரம்பூரில் உள்ள சடையப்பன் தெருவில் வைத்து அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத 6 நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யத் தனிப்படை அமைத்தது காவல்துறை.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சிவா, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராகுல், கோகுல், ஹரிஹரன், மலர்க்கொடி, அஞ்சலை, கதிரவன் என ஏற்கனவே 18 பேரைக் கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரௌடி திருவேங்கடம் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தப் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய முகிலன், அப்பு, நூர் விஜய் என, மேலும் 3 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்ய இவர்கள் மூவரும் வெடிகுண்டுகள் விநியோகித்ததாகக் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவ இடத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை இவர்கள் மூலமாக கொலையில் ஈடுபட்ட நடர்களுக்குக் கைமாற்றப்பட்ட செய்தி காவல்துறைக்கு கிடைத்து, அதன் அடிப்படையில் இந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள ரௌடிகள் ராஜா மற்றும் சம்போ செந்தில் ஆகியோரைப் பிடிக்க காவல்துறை தொடர்ந்து முயற்சியெடுத்து வருகிறது.