இன்று (டிச.15) நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அக்கட்சி அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
முதலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தொழிலதிபர் ரத்தன் டாடா, சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, நடிகர் டெல்லி கணேஷ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு,
1) ஃபெஞ்சல் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கண்டன தீர்மானம்.
2) பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்குக் கண்டன தீர்மானம்.
3) மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்.
4) திருக்குறளை தேசிய நூலாகவும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வலியுறுத்தி தீர்மானம்.
5) வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்குதலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம்.
6) தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி தீர்மானம்.
7) கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்.
8) தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வினை பாரபட்சமில்லாமல் வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்
9) திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி, சொத்துவரி, மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
10) எடப்பாடி பழனிசாமியை 2026-ல் தமிழக முதல்வராக்க தீர்மானம்.