கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 24 என தமிழ்நாடு அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 308 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சூரல்மலா மற்றும் முண்டக்கை பகுதிகளில் தொடர்ந்து, 5-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கேரளத்துக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான மீட்புக் குழு கேரளம் விரைந்துள்ளது. இந்தக் குழு அளித்த தகவலின்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள். இதில் 21 பேர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டு, வயநாட்டில் வசித்து வந்தவர்கள். மேலும், 3 பேர் வேலை சார்ந்த பணிக்காக வயநாடு சென்றிருக்கிறார்கள். இதுதவிர 25 பேர் இன்னும் தேடப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.