தெற்கு ரயில்வே மண்டலத்தின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) முதல் அமலாகிறது.
அடுத்த ஆண்டுக்கான, தெற்கு ரயில்வே மண்டலத்தின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) முதல் அமலுக்கு வரும் நிலையில், நடப்பாண்டில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் அறிமுகமாகியுள்ள புதிய ரயில்கள், சேவை நீட்டிக்கப்பட்ட ரயில்கள், வேகம் அதிகரிக்கப்பட்ட ரயில்கள், பயண நேரம் குறைக்கப்பட்ட ரயில்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய புதிய கால அட்டவணை வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில், ரயில்வே மண்டலங்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை இன்று (டிச.31) வெளியாகியுள்ளது.
இதன்படி, மதுரை-பெங்களூரு-மதுரை வந்தே பாரத், சென்னை எழும்பூர்-நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வந்தே பாரத், மைசூரூ-சென்னை சென்ட்ரல்-மைசூரூ வந்தே பாரத், பெங்களூரு கண்டோன்மெண்ட்-கோயமுத்தூர்- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 10 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பாலக்காடு முதல் திருநெல்வேலி வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரையிலும், மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயில் போத்தனூர் வரையிலும், மைசூரூ-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் கடலூர் துறைமுகம் வரையிலும், காக்கிநாடா-செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் புதுச்சேரி வரையிலும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
16 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன, மேலும் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட 138 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.