படம்: https://twitter.com/TimesNow
தமிழ்நாடு

2004 மக்களவைத் தேர்தல் 20 நாள்களில் முடிந்தது: தேர்தல் ஆணையம் மீது பிடிஆர் விமர்சனம்

"மக்களவைத் தேர்தலானது மார்ச் 16-ல் அறிவிக்கப்பட்டு ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒரு தேர்தலை நடத்தவே இவர்களுக்கு 3 மாதங்கள் தேவைப்படுகிறது."

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலை நடத்த 3 மாதங்கள் ஆகிறது எனில், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ஒன்றரை ஆண்டு ஆகும் என மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் நௌ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது:

"தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பல வழிகளில் ஒருசார்பு நிலை எடுத்து வருகிறது.

2004-ல் முதல்கட்ட வாக்குப்பதிவு மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கு இடையிலான நாள்கள் எவ்வளவு தெரியுமா? அப்போது இருந்த தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தைக் காட்டிலும் குறைவாக இருந்தது. மனித வளத்தைத் திரட்டுவது கடினமானதாக இருந்தது. தேர்தல் ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவு. இருந்தபோதிலும், அனைத்துக் கட்ட வாக்குப்பதிவும் வெறும் 20 நாள்களில் நடந்து முடிந்தன.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று மக்களவைத் தேர்தலானது மார்ச் 16-ல் அறிவிக்கப்பட்டு ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஒரு தேர்தலை நடத்தவே இவர்களுக்கு 3 மாதங்கள் தேவைப்படுகிறது. இதே புத்திசாலித்தனமான அரசுதான் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசுகிறது.

மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு மட்டும் 3 மாதங்கள் ஆகிறது என்றால், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ஒன்றரை ஆண்டுகள் ஆகும்" என்றார் அவர்.