வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பேர் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பேர் உயிரிழப்பு  
தமிழ்நாடு

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பேர் உயிரிழப்பு

யோகேஷ் குமார்

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இருவர், மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலையின் 7-வது மலை உச்சியில் உள்ள சிவனை தரிசிக்க, பிப். 12 முதல் பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பா ராவ் என்பவர் தனது நண்பர்களுடன், நேற்று காலை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்திற்கு வந்து மலையேறியதாகத் தெரிகிறது.

4-வது மலையில் நடந்து கொண்டிருந்தபோது சுப்பா ராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு அவரை அடிவாரத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து, அங்கு வந்த மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் சுப்பாராவ் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

மேலும், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரும் மலையிலிருந்து இறங்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதய பிரச்னை மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.