தமிழ்நாடு

சென்னையில் தெருநாய்களுக்கு உணவு வைத்த இருவர் மீதான புகார் ஏற்பு! | Stray Dogs |

முதலில் இதுதொடர்பாக புகாரை ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது.

கிழக்கு நியூஸ்

சென்னை கோட்டூர்புரத்தில் தெருநாய்க்கு உணவு வைத்த புகாரில் அடையாளம் தெரியாத இருவர் மீதான புகாரை ஏற்று காவல் துறை சார்பில் சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க தெருநாய்கள் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரை தெருநாய்கள் கடித்து வருவது தொடர்ச்சியாகச் செய்திகளாகி வருகின்றன. ரேபிஸ் நோய்ப் பாதிப்பு அச்சம் மக்கள் முன் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தெருநாய் பிரச்னை குறித்து பிறப்பித்த உத்தரவு நாடு முழுக்க சலசலப்பை உண்டாக்கியது. தில்லி-என்.சி.ஆர். பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, அவற்றை பிரத்யேகமான காப்பகங்களில் அடைத்து வைக்கவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வு ஆகஸ்ட் 8 அன்று உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து நாடு முழுக்க பெரும் விவாதம் எழுந்தது. நாய் பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் ஒருபுறம் மற்றும் நாய் ஆர்வலர்கள் மறுபுறம் என இந்த விவகாரம் தீவிரமெடுத்தது. இதன் காரணமாக, மிக அரிய நடவடிக்கையாக இந்த வழக்கின் விசாரணையை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

திருத்தியமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட தெருநாய்களை அவை வசித்து வந்த அதே பகுதிகளில் விடுவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேநேரம், ரேபிஸ் பாதிப்பு அல்லது ஆக்ரோஷமான நடத்தைகொண்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அவை பிரித்யேக காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் நாய் பிரச்னை தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் அக்டோபர் முதல் கட்டாயம் மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியே அழைத்துச் செல்லும்போது வளர்ப்பு நாய்களுக்கு வாய்க்கவசம் கட்டாயம் அணிவித்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம், தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்துச் செல்வது தொடர்பாகவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் அடையாளம் தெரியாத இருவர் தெருநாய்களுக்கு உணவு வைத்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முரளிதரன் சிவலிங்கம் என்பவர் அளித்த புகாரை, கோட்டூர்புரம் காவல் துறையினர் ஏற்றுள்ளார்கள்.

முரளிதரன் சிவலிங்கம் அளித்த புகாரின்படி, செப்டம்பர் 7 அன்று பகல் 12.49 மணியளவில் இருவர் ஸ்கூட்டர் மூலம் கன்டெய்னரில் உணவுகொண்டு வந்து வைத்துள்ளார்கள். முரளிதரன் இவற்றைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.

கோட்டூர்புரம் காவல் துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி அலுவலர்கள் முதலில் இதுதொடர்பாக புகாரை ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. பிறகு, இப்பிரச்னையை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். தனது பதிவில் சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, அமைச்சர் கே.என். நேரு, மேயர் பிரியா, உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். இதன்பிறகே, புகார் ஏற்கப்பட்டு சிஎஸ்ஆர் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அடையாளம் தெரியாதவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

Stray Dogs | Chennai Corporation | Chennai Police |