கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் 1.8 லட்சம் தெருநாய்கள்!

66,285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுக்க அண்மைக் காலமாக தெருநாய்த் தொல்லைகள் மக்களுக்குப் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. சாலையில் செல்லும் குழந்தைகளை விரட்டி கடிப்பது உள்ளிட்டவை பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் சம்பவங்களே ஏராளம் எனும் நிலையில், இவற்றில் பதிவாகாமல் இருக்கும் சம்பவங்கள் எத்தனையோ என அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியப் பிரச்னையாக தெருநாய்ப் பிரச்னை மாறி வருகிறது.

இவற்றின் பகுதியாக சென்னை மாநகராட்சியில் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

"தெருநாய் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாக்கவும் புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல எண்: 1, 2, 3, 4, 5, 7, 8, 11, 12, 14 ஆகிய மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் புளியந்தோப்பு, லாய்ட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. கண்ணம்மாப்பேட்டையில் புதிதாக அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது.

நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்துள்ளதன் திட்டத்தில் 78 ஊழியர்கள், 23 கால்நடை உதவியாளர்கள் மற்றும் 4 கால்நடை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நாய்களைப் பிடிப்பதற்காக 16 வாகனங்கள் இணைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2021 முதல் 2025 ஏப்ரல் வரை மேற்கொள்ளப்பட்ட தெருநாய்கள் கணக்கெடுப்பில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 66,285 தெருநாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 66,285 தெருநாய்கள் மற்றும் 41,917 செல்லப்பிராணிகள் என மொத்தம் 1,08,202 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 1.8 லட்சம் தெருநாய்களுக்கும் ரூ. 3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வரும் ஜூன் மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 1.8 லட்சம் தெருநாய்கள்!.pdf
Preview