விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்திலிருந்து 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றது கேள்விக்குள்ளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8 அன்று வெளியானது. இதில் வேதியியல் பாடத்தில் 3,181 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார்கள். இதிலிருந்து தான் தற்போது புதிய பிரச்னை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது. விழுப்புரத்திலிருந்து மூன்று பள்ளிகள் மற்றும் கடலூரிலிருந்து ஒரு பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 600 பேரில் 272 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், விழுப்புரத்திலிருந்து 3 பள்ளிகளைச் சேர்ந்த 450 மாணவர்கள் விழுப்புரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வெழுதியுள்ளார்கள். இந்த ஒரு தேர்வு மையத்திலிருந்து 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார்கள். இதுமாதிரியான தேர்ச்சி முடிவுகள் இதற்கு முன்பு வந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த 167 மாணவர்கள் எந்தெந்த பள்ளியைச் சேர்ந்தவர்கள்?
65 பேர் ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்
91 பேர் அருகிலுள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்தவர்கள்
11 பேர் மற்றொரு தனியார் பள்ளியைச் சேர்ந்தவர்கள்
ஒரே தேர்வு மையத்திலிருந்து எப்படி 167 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருக்க முடியும் என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழத் தொடங்கின. முன்கூட்டியே வினாத் தாள் கசிந்ததா அல்லது வேறு ஏதேனும் முறைகேடுகள் நிகழ்ந்ததா என்று கேள்விகள் வைக்கப்படுகின்றன.