தமிழ்நாட்டில் 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 13 நகராட்சிகள் மற்றும் 25 பேரூராட்சிகளை உருவாக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்பட 13 புதிய நகராட்சிகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு, காளையார் கோவில், திருமயம் உள்பட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 16 மாநகராட்சிகளோடு 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சியை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 2025 ஜனவரி 5 அன்று நிறைவடைகிறது.
இந்த மாவட்டங்களில் ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும் பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்ய உரிய செயற் குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.
இவற்றைப் பரிசீலித்து பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சிய இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார் கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வள்ளுவர் சிலையுடன் சிறப்பு பெற்றிருக்கக் கூடிய கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரியில் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.