சவுக்கு சங்கர் 
தமிழ்நாடு

போதைப் பொருள் தடுப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு நீதிமன்றக் காவல்

கிழக்கு நியூஸ்

போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவல் அதிகாரிகள் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தார்கள்.

இந்த கைதைத் தொடர்ந்து, அவர் போதைப் பொருள் வைத்திருந்ததாக தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சவுக்கு சங்கர் காரில் 500 கிராம் போதைப் பொருள் கிடைத்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராம்பிரபு, அவருடன் இருந்த சென்னையைச் சேர்ந்த ராஜரத்தினம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்திய தேனி காவல் துறையினர், சவுக்கு சங்கர் உள்ளிட்டோருக்கு போதைப் பொருள் வழங்கியதாக கமுதியைச் சேர்ந்த மஹேந்திரன் என்பவரையும் கைது செய்தார்கள்.

இந்த வழக்கில் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

கோவை சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கர், போதைப் பொருள் தடுப்பு வழக்கில் மதுரையிலுள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் கையில் கட்டுடன் நீதிமன்றத்துக்கு வந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வழக்கில் சவுக்கு சங்கரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.