படம்: @_ITWingNTK, ANI
தமிழ்நாடு

கடந்த 31 நாள்களில் 133 படுகொலைகள் நடந்துள்ளன: சீமான்

எனக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் நோக்கம் ஒன்றுதான்..

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் கடந்த 31 நாள்களில் 133 படுகொலைகள் நடந்துள்ளதாக நாம் தமிழரின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவரது உடல் பெரம்பூரில் மாநகராட்சிப் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பகுஜன் தேசியத் தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். சீமானும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:

"ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக காவல் துறையினர் யாரையும் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் சரணடைந்துள்ளார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் எனும்பட்சத்தில் எந்த இடத்தில் வைத்து எப்படி கைது செய்யப்பட்டார்கள்? இவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. கொலைக்கான காரணம் குறித்து எதுவும் விசாரிக்கவில்லை.

துப்பாக்கியை வைத்திருக்க ஆம்ஸ்ட்ராங்குக்கு உரிமம் உள்ளது. தேர்தல் நேரத்தில் இவர் ஒப்படைத்திருந்தார். தேர்தல் முடிந்தவுடன் அதை அவரிடம் திருப்பி ஒப்படைத்திருக்க வேண்டும். ஏன் ஒப்படைக்கவில்லை?

தமிழ்நாட்டில் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பில்லை. கடந்த 31 நாள்களில் ஆம்ஸ்ட்ராங் உள்பட 133 படுகொலை நடந்துள்ளன. அறியப்பட்ட தலைவர் என்பதால் இந்தக் கொலை வெளியில் தெரிகிறது. அப்படியிருக்க சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஏன் பேச வேண்டும்.

எனக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் ஒரே நோக்கம், வேறுவேறு தளம், வேறுவேறு களம். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது, இந்திய தேசிய அரசியல் வேண்டாம் என்று தர்க்கம் செய்தேன். அவர் 2007-ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துவிட்டார். நான் 2010-ல்தான் கட்சியைத் தொடங்கினேன். நான் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துவிட்டேன் என்று கூறியதால் சரி அங்கேயே இருங்கள் என்றேன்.

இங்கு இருக்கக்கூடிய பிள்ளைகளைப் படிக்கவைத்துள்ளார். தமிழ்ச் சமூக ஓர்மை குறித்தெல்லாம் ஆம்ஸ்ட்ராங் பேசியுள்ளார். ஒற்றுமை இல்லாததால் உரிமையை இழந்து நிற்கிறோம் என்று பேசியிருக்கிறார். நான் பேசும் அரசியலை வேறு தளத்தில் பேசியிருக்கிறார். அவருடையக் கருத்தை நான் வேறு தளத்தில் பேசுகிறேன். எனவே, இருவருடைய நோக்கம் ஒன்றுதான்" என்றார் சீமான்.