கோப்புப்படம் 
தமிழ்நாடு

கடந்த 4 ஆண்டுகளில் சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள்: தரவுகளைப் பகிர்ந்து டிஆர்பி ராஜா பெருமிதம்! | EPFO |

நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்தம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டில் மட்டும் 10% வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) தரவுகளைப் பகிர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலூக்கம் பெற்ற கொள்கைகள் மற்றும் புரிந்துணர்வு மூலம் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளாக மாறியுள்ளன. இதற்கு மத்திய அரசின் இபிஎஃப்ஓ தரவுகளே ஆதாரம்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சராசரியாக 12.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. 2021-22 முதல் 2024-25 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 52 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்துள்ளார்கள். நாட்டில் மொத்தம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பில் இது 10%.

முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது பெரும் பாய்ச்சல் என்பதைத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. 2018-19-ல் இபிஎஃப்ஓ-வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பதிவு செய்திருந்தார்கள். அப்போது கர்நாடகம் மற்றும் குஜராத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருந்தது.

2022-23-ல் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இபிஎஃப்ஓ-வில் இணைந்துள்ளார்கள். கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 12.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2021 தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற வாக்குறுதியைவிட இது 20% அதிகம்.

தேசிய அளவில் உற்பத்தியில் ஜாம்பவானான மஹாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாகத் தொடர்ந்து மூன்றாண்டுகளாக இரண்டாவது இடத்தைப் பிடித்து வருகிறது தமிழ்நாடு. தேசிய அளவிலான வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப் பெரியது, நிலையானது. நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இது முக்கியமான சமிக்ஞை" என்று டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதே தரவுகளை முன்வைத்து எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான்!

அந்த வகையில், 2021-ல் திருச்சியில் நான் உறுதியளித்த அளவான ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது திராவிட மாடல்!

நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்!" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Employment | TN Jobs | Jobs | Tamil Nadu | TRB Rajaa | MK Stalin |