தமிழ்நாடு

தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ. 840 கோடி இழப்பு: சாம்சங் நிறுவனம்

நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொழிலாளர்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதாகத் தொழிலாளர்கள் தரப்பில் வாதம்.

கிழக்கு நியூஸ்

தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் நிறுவனத்துக்கு ரூ. 840 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே செயல்பட்டு வரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்காக சிஐடியூ தொழிற்சங்கம் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சாம்சங் தொழிலாளர்கள், சிஐடியூ தொழிற்சங்க இணைப்புப் பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கி அதைப் பதிவு செய்யக்கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும் தொழிலாளர் நலத் துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்தார்கள். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, தங்களுடையத் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சாம்சங் நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தது.

இதுதொடர்புடைய வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சாம்சங் நிறுவனம் சார்பில், நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்குவது அடிப்படை உரிமையில்லை எனவும் தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ. 840 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சாம்சங் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், வேறு பெயரில் தொழிற்சங்கத்தைத் தொடங்கிக் கொள்ளலாம் என்றும் சாம்சங் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது அடிப்படை உரிமை என்றும் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது தொழிலாளர்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதாகவும் வாதாடினார்.

இதைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் 11-க்கு ஒத்திவைக்கப்பட்டது.