ANI
ஆன்மிகம்

கேதார்நாத் கேபிள் கார் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: அம்சங்கள் என்னென்ன?

பிற மூன்று புனித தலங்களை ஒப்பிடும்போது கேதார்நாத்தை அடைவது மிகவும் சவாலான காரியமாகும்.

ராம் அப்பண்ணசாமி

ரூ. 4,081 கோடி மதிப்பீட்டில் கேதார்நாத் கேபிள் கார் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று (மார்ச் 5) ஒப்புதல் வழங்கியுள்ளது.

யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் என உத்தரகண்ட் மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற நான்கு புனிதத் தலங்கள் உள்ளன. பிற மூன்று தலங்களை ஒப்பிடும்போது கேதார்நாத்தை அடைவது மிகவும் சவாலான காரியமாகும். பனிப்பொழிவு காரணத்தால் ஏறத்தாழ 6 மாத காலம் மட்டுமே திறந்திருக்கும் இந்த கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (மார்ச் 5) தலைநகர் தில்லியில் கூடிய மத்திய அமைச்சரவை, கேதார்நாத்தில் கேபிள் கார் அமைப்பதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 12.9 கி.மீ. தூரத்திற்கு, ரூ. 4,081 கோடி மதிப்பீட்டில் இந்த கேபிள் கார் திட்டம் அமையவுள்ளது.

தனியாரின் பங்களிப்புடன் உருவாகும் இந்த கேபிள் கார் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, ஒரு மணி நேரத்திற்கு 1,800 பக்தர்கள் என்ற வகையில், ஒரு நாளுக்கு சுமார் 18,000 பக்தர்களை சோன்பிரயாக் பகுதியில் இருந்து கேதார்நாத்திற்கு அழைத்து செல்லமுடியும்.

சோன்பிரயாக் வரை கார் அல்லது பொதுப் போக்குவரத்தை உபயோகித்துச் சென்று, பிறகு அங்கிருந்து தனியார் ஜீப் மூலம் கௌரிகுண்ட் என்ற இடத்திற்குச் செல்லவேண்டும். கௌரிகுண்டில் இருந்து நடைபயணமாகவோ அல்லது குதிரைகளை உபயோகித்தோ 16 கி.மீ. பயணித்து கேதார்நாத் கோயிலை அடையலாம். இதற்கு தோராயமாக 8 முதல் 9 மணி நேரம் எடுக்கும்.

கேபிள் கார் திட்டம் நடைமுறைக்கு வரும்போது இந்த பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும் என்று கூறப்படுகிறது.