மண்டல மகரவிளக்கு பூஜைக்காக இன்று (நவ.15) மாலை சபரிமலை கோயில் நடைதிறக்கப்படுகிறது. இதன்மூலம் கார்த்திகை, மார்கழி மாதங்களுக்கான சபரிமலை சீசன் தொடங்குகிறது.
சபரிமலை அய்யப்பன் கோயிலின் தலைமை தந்திரி பி.என். மஹேஷ் நம்பூதிரி இன்று மாலை 4 மணி அளவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்த பிறகு, கோயில் நடைதிறக்கப்படுகிறது. இதனை அடுத்து சபரிமலை மற்றும் மாளிகைபுரத்தின் புதிய தந்திரிகள் இன்று பொறுப்பேற்கின்றனர்.
சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வதற்கு முன்பு அமலில் இருந்த நேரடி முன்பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டு, நடப்பாண்டு முதல் தரிசனம் மேற்கொள்ள இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக கேரள தேவஸ்சம் அமைச்சர் வி.என். வாசவன் அறிவித்தார்.
கேரள அரசின் முடிவை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், `நேரடி முன்பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது தேவையில்லாத குழப்பங்களுக்கும், கூட்ட நெரிசலுக்கும் வழிவகுக்கும். இணைய வழியாக முன்பதிவு செய்யத் தெரியாத பிற மாநில பக்தர்களுக்கு இதனால் சிரமம் ஏற்படும். எனவே இந்த முடிவை அரசு மீள் பரிசீலனை செய்யவேண்டும்’ என்றார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்துக்குப் பதிலளித்த அமைச்சர் வாசவன், கடந்த காலங்களில் நேரடி முன்பதிவு நடைமுறையால் சபரிமலையில் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டதாகவும், நாள் ஒன்றுக்கு 80,000 பக்தர்கள் அனுமதிக்க தற்போது முடிவு செய்துள்ளதாகவும், கூட்டத்தை சமாளிக்க தேவையான வசதிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.