https://x.com/tirupati_info
ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் | Tirupathi |

இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளைப் பக்தியுடன் வழிபட்ட பக்தர்கள்...

கிழக்கு நியூஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 2-ம் நாளான இன்று சின்ன சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று (செப்.24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கருட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 2 வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இதில், தினமும் பிரமாண்டமான அளவில் வாகன சேவைகள் நடைபெறும். அதன்படி முதல் நாளான நேற்று, இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப ஸ்வாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். கோயிலின் மாட வீதிகளில் கோலாகலமாக உலா வந்த ஏழுமலையானைத் திரளாகக் கூடி இருந்த பக்தர்கள் வழிபட்டனர். அப்போது மாட வீதிகளில் பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதற்கிடையில், பிரம்மோற்சவம் காரணமாக நேற்று திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 8-10 மணி நேரம் ஆனதாகக் கூறப்படுகிறது. தரிசனத்திற்காகப் பக்தர்கள் திரளும் 5 காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்துள்ளது. ரூ. 300 சிறப்பு தரிசனத்திற்கும் 5 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான இன்று காலை ஏழுமலையான் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். மாட வீதிகளில் ஆயிரக்கணக்கில் கூடி இருந்த பக்தர்கள் கோவிந்தா முழுக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை அன்னப்பறவை (அம்ச) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து கையில் வீணை ஏந்தி மலையப்ப ஸ்வாமி எழுந்தருள்வார்.