தைப்பூசத் திருவிழா பழநியில் உள்ள பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் இன்று (பிப்.5) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழநியில் உள்ளது. இந்நிலையில் பாலதண்டாயுதபாணி கோயிலின் உப கோயிலான பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று (பிப்.5) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதலில் சுவாமி, கொடிமரம் மற்றும் கொடிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வேல், மயில், சேவல் இடம்பெற்ற கொடி ஏற்றப்பட்டது. தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளான பிப்.10-ல் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற உள்ளது. அன்று இரவு 9 மணிக்கு மேல் வெள்ளித்தேரில் மணக்கோலத்தில் சுவாமி உலா வருவார்.
இதைத் தொடர்ந்து தைப்பூச தினமான பிப்.11 அன்று மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. தேரோட்டத்தின்போது நான்கு ரத வீதிகளில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
பிப்.14-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் நிகழ்வு நடைபெறும், இதனை அடுத்து அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா விழா நிறைவுபெறும்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநிக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பழநி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.5) தொடங்கி 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.