திருச்செந்தூர் - கோப்புப் படம் ANI
ஆன்மிகம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் கோலாகலம்!

விரைவு தரிசன கட்டணச் சீட்டுகள் பழனியில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் பல மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார்கள்.

ராம் அப்பண்ணசாமி

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (பிப்.11) பழநி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காகக் குவிந்துள்ளார்கள்.

தமிழகத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலையில் தைப்பூசத் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இதனால் அறுபடை வீடுகள் அனைத்திலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளார்கள். காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது வேண்டுதல்களை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். குறிப்பாக, பழநியின் கிரி வீதி மற்றும் சந்நதி வீதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

விரைவு தரிசன கட்டணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் அனைவரும் பல மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனத்தில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார்கள். அதேபோல, திருத்தணியில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள்.

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் அதிகாலை 1 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, அதன்பிறகு விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், தீபாராதனை, கடலில் தீர்த்தவாரி ஆகியவை நடைபெற்றன. தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று (பிப்.10) இரவு முதலே திருச்செந்தூரில் குவிந்துள்ளார்கள்.

அதேபோல, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் பழமுதிர்ச்சோலை படைவீடுகளிலும் சுவாமி தரிசனம் மேற்கொள்ள திரளான பக்தர்கள் குவிந்துள்ளார்கள்.