மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஏப்ரல் 4) குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், கோயிலில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேல் திருடப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலின் முக்கியத்துவத்தை முன்வைத்து முருகனின் ஏழாவது படை வீடாக இது பக்தர்களால் அழைக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2013-ல் இங்கு குடமுழுக்கு நடைபெற்றது.
கடந்த ஓரிரு ஆண்டுகளாக மருதமலை கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையால் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாளை (ஏப்ரல் 4) அங்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான பூஜைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது.
மேலும், குடமுழுக்கை ஒட்டி மருதமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மருதமலையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் நேற்று (ஏப்ரல் 2) திருடுபோயுள்ளது.
மருதமலை கோயில் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற தியான மண்டபம் உள்ளது. முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபடும் வகையில், அங்கு சுமார் இரண்டரை அடியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டிலான வெள்ளி வேல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று அந்த வெள்ளி வேல் திருடுபோயுள்ளது.
இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, நேற்று நண்பகல் 12 மணி அளவில், தியான மண்டபத்திற்குள் சாமியார் வேடத்தில் நுழைந்த மர்ம ஆசாமி வெள்ளி வேலை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், வடவள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.