சபரிமலை ஐயப்பன் கோவில் K. Sathish
ஆன்மிகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு!

Madhavan

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தரிசன நேரத்தை நீட்டித்துள்ளது தேவசம் போர்டு.

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் காலத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனைக் காண சபரிமலைக்கு வருவார்கள். இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 அன்று கோவில் நடை திறக்கப்பட்டது.

 தினந்தோறும் 50 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தற்போது சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால், ஐயப்பனைக் காண சுமார் 16 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தினசரி சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாகக் குறைத்துள்ளது தேவசம் போர்டு.

வழக்கமாக, சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். மதியம் 1 மணிக்குப் பிறகு நடை சாத்தப்பட்டு பின்னர் மாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை மீண்டும் சாத்தப்படும். இந்நிலையில், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இன்று முதல் (டிசம்பர் 11) மாலை 3 மணிக்கே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தேவசம் போர்டு முன்னெடுத்து வருகிறது.