திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா இன்று (ஜூலை 7) காலை கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை நேரில் காண்பதற்குத் திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.
முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்கள் வசதிக்காக ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், நான்கில் மூன்று பங்கு பணிகள் இதுவரை நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடமுழுக்கு திருப்பணிகள் நிறைவுபெற்றதும், கடந்த ஜூன் 26 அன்று கணபதி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஜூலை 1 அன்று யாகசாலை பூஜைகள் தொடங்கின.
இந்நிலையில், இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, அதிகாலை 5.35 மணிக்கு யாகசாலையில் இருந்து கோயில் கோபுர விமான கலசங்களுக்கு, கும்பங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. காலை 6.22 மணியளவில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
அப்போது, கடலோரத்தில் குழுமியிருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணப் பிளந்தது. குடமுழுக்கு முடிந்ததும் 20 பெரிய டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவை பக்தர்கள் தடையின்றி காண்பதற்கு வசதியாக, திருச்செந்தூர் நகர் முழுவதும் முக்கிய பகுதிகளில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், சோளிங்கள் யோக நரசிம்மர் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில் ஆகியவற்றிலும் இன்று (ஜூலை 7) குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.