ANI
ஆன்மிகம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மின்சார வாகனச் சேவை

கிழக்கு நியூஸ்

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன. 22 அன்று நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றிவழிபட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனவரி 22 அன்று ராமர் கோயிலுக்கு தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனச் சேவை அயோத்தியில் தொடங்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் மற்றும் காலைநிலை மாற்றத்தின் முக்கியக் காரணம் - கார்பன் உமிழ்வு. விரைவான நகரமயமாக்கல், அதிகரிக்கும் போக்குவரத்து காரணமாக அதிகளவில் கார்பன் உமிழ்வு ஏற்படுகிறது. இது, சூரியனின் வெப்பத்தைப் பூமிக்குள் தக்கவைத்து புவி வெப்பமடைதலை அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளைத் தவிர்க்க, வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே கட்டுப்படுத்தவேண்டும், இதற்காக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை நிகர பூஜ்ஜியமாகக் குறைக்கவேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். உலக அளவில் கார்பன் உமிழ்வில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. 2070-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இந்தியா இலக்கு வைத்துள்ளதாக பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பிரதர் மோடி கூறியுள்ளார். இதனால் சுற்றுலாத்தலங்களில் நிகர பூஜ்ஜிய கார்பன் நிலையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தியில் பூஜ்ஜிய கார்பன் நிலையை உருவாக்கும் நோக்கில் உத்தரப் பிரதேச அரசு, EV என்கிற மின்சார வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. அயோத்தி மேம்பாட்டு ஆணையம் (ADA) இதற்கான ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது.

இதன் முதற்கட்டமாக அயோத்தியில் நான்கு பயணிகள் அமரும் திறன் கொண்ட நான்கு சக்கர மின்சார வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், அயோத்தியில் கடந்த ஆண்டு தீபோத்சவ் திட்டத்தில் இருந்து இ-கார்ட் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில் 6 பயணிகள் அமரும் வசதி உள்ளது. முக்கியமாக ஹனுமன்கர்ஹி, ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவில் வளாகம் மற்றும் பிற யாத்திரை தலங்களுக்கு வயதான பக்தர்கள் பயணிக்க மிகவும் உதவியாக உள்ளது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, லக்னோ மற்றும் அயோத்தி இடையே மின்சார வாகன போக்குவரத்து சேவையின் செயல்பாடும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையைத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஏடிஏ இயக்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் அழகை அதிகரிக்க, மகர சங்கராந்தி (ஜனவரி 15) முதல் ஜனவரி 22 வரை அயோத்தியில் கலைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்பட பிரபலங்களின் வருகையும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு போக்குவரத்திற்கு முன்னுரிமை அளித்து, 200 மின்சார வாகனங்களை இயக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 6 முதல் அயோத்தி விமான நிலையத்திற்கு வரும் பக்தர்களுக்கு இந்தச் சேவை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்பின் உதவியுடன் இச்சேவை செயல்படுத்தப்படும்.

லக்னோ மற்றும் அயோத்தி இடையேயும் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வழிப் பயணத்திற்கு ரூ. 3000 கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேபோல, அயோத்தியில் 10 கி.மீ. வரை பயணம் செய்ய ரூ. 250, 15 கி.மீ. வரை பயணிக்க ரூ. 399, 20 கி.மீ. வரை பயணம் செய்ய ரூ. 499 செலுத்த வேண்டும். அதேபோல 20 முதல் 30 கி.மீ. வரையிலான பயணத்துக்கு ரூ. 799, 30 முதல் 40 கி.மீ. பயணத்திற்கு ரூ. 999 செலுத்த வேண்டும் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.