பங்குனி ஆராட்டு விழாவை ஒட்டி, நாளை (ஏப்ரல் 1) நடை திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோயில் அடுத்த 18 நாட்களுக்கு திறந்திருந்திருக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. கடைசியாக, கடந்த பிப்ரவரி 12 அன்று மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டது. 5 நாட்கள் கழித்து பிப்ரவரி 17 அன்று நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் பங்குனி உத்திர விழா, ஆராட்டு விழா, சித்திரை விஷு பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து நிகழவுள்ளன. இதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 1) மாலை 5 மணி அளவில் ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்படுகிறது.
ஏப்ரல் 3-ல் தொடங்கி விஷேச பூஜைகள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 14 அன்று அதிகாலை 3 மணிக்கு விஷு கனி தரிசனத்துடன் படி பூஜைகளும், அதன்பிறகு ஏப்ரல் 18 ஹரிவராசனமும் நிறைவடைந்தபிறகு இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வைகாசி பூஜைகளுக்காக மே 14-ல் நடை திறக்கப்படும் ஐயப்பன் கோயில், மே 19-ல் நடை அடைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நாளை நடைதிறக்கப்படுவதை ஒட்டி, சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் https://sabarimalaonline.org/ இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.