ஆன்மிகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை (ஏப். 10) அறுபத்து மூவர் வீதியுலா!

பங்குனி மாதப் பெருவிழா கடந்த ஏப்.3 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராம் அப்பண்ணசாமி

பங்குனி திருவிழாவை ஒட்டி, நாளை (ஏப்ரல் 10) மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலா நடைபெறவுள்ளது.

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 10 நாள் பெருவிழா விடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது.

நடப்பாண்டின், பங்குனி மாதப் பெருவிழா கடந்த ஏப்ரல் 2 அன்று கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கியது. இதற்கு மறுநாள், காலை 8.10 மணிக்குக் கொடியேற்றப்பட்ட பிறகு, வெள்ளி பவளக்கால் விமான சேவை நடைபெற்றது. அன்று இரவு 10 மணிக்கு மயில் வடிவில் அம்மை சிவ பூஜை செய்யும் காட்சி, புன்னை மர வாகனம், கற்பக மர வாகனம், வேங்கை மர வாகன ஆகியவற்றின் வீதி உலா நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, ஏப்.5 அன்று இறைவன் அதிகார நந்தியில் எழுந்தருளும் நிகழ்வும், ஏப்.7 அன்று வெள்ளி ரிஷப வாகன காட்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப். 9) காலை தொடங்கியது. கோயிலைச் சுற்றி அமைந்துள்ள மாட வீதிகளில் கபாலி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.

இந்நிலையில், பங்குனி திருவிழாவின் சிறப்பம்சமான அறுபத்துமூவர் விழா நாளை (ஏப்.10) நடைபெறுகிறது. இதை ஒட்டி, மயிலாப்பூர் முழுவதுமே விழாக் கோலமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவில் பங்கேற்பதற்காக கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் பெருமளவில் குவிந்திருக்கும் பக்தர்களுக்காக, ஆங்காங்கே நீர் மோர், பானகம் போன்றவை வழங்கப்படும்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை மட்டுமின்றி, புறநகரப் பகுதிகள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.