அயோத்தி ராமர் கோயில் ANI
ஆன்மிகம்

அயோத்தி ராமர் கோயிலில் 45 கிலோ தங்கத்தில் கதவுகள், சிம்மாசனம்!

ராமர் தர்பாருக்குள் நுழைய பொதுமக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

அயோத்தி ராமர் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் 45 கிலோ மதிப்பிலான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ராமர் கோயில் கட்டுமானப் பணிக்குழுவின் தலைவரும், பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலருமான நிருபேந்திர மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

உ.பி. மாநிலம் அயோத்தியில் கடந்த 22 ஜனவரி 2024-ல் ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. எனினும், கோயில் வளாகத்தின் முதல் தளத்தில் ராமர் தர்பாரின் பணிகள் நடந்துவந்தன. அந்த பணிகள் நிறைவுபெற்று நேற்றைக்கு முந்தைய தினம் (ஜூன் 5) அதன் குடமுழுக்கு நடைபெற்றது.

வரிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், ரூ. 50 கோடி மதிப்பிலான (45 கிலோ) தங்கம் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிருபேந்திர மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி, ராமர் கோயிலின் தரை தளத்தில் இருக்கும் கதவுகள் மற்றும் ராமரின் சிம்மாசனம் ஆகியவற்றை உருவாக்குவதில் தாராளமாக தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ராமர் தர்பாருக்குள் நுழைய பொதுமக்களுக்கு தற்சமயம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு, குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ராமர் தர்பாரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இலவசமாக வழங்கப்படும் நுழைவுச் சீட்டுகள் மூலம் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராமர் கோயிலின் பிரதான கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தாலும் அருங்காட்சியகம், அரங்கம் மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட கோயில் வளாகத்தின் பிற பகுதிகளின் கட்டுமானப் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நடப்பாண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.